கோடிக்கணக்கான உலக மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலி ஆபத்தானது என்றும், பயனாளர்களின் தகவல்களை திருடுவதற்காகவும், மக்களை கண்காணிப்பதற்காகவுமே அது இயங்கு வருவதாகவும் டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவேல் துரோவ் எச்சரித்துள்ளார்.
பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் என கொடிகட்டிப் பறந்த சமூக வலைதளங்களுக்கு மத்தியில் சைலண்டான அறிமுகம் கொடுத்து கோடிக்கணக்கான உலக மக்களை தனது வாடிக்கையாளர்களாக மாற்றி இருக்கிறது வாட்ஸ் அப்.
வாட்ஸ் அப்புக்கு கிடைத்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள், வருமானம், வரவேற்பை பார்த்த பேஸ்புக் நிறுவனம், அதன் நிறுவனர்களிடம் பல கோடி ரூபாய் கொடுத்து அதை வாங்கியது. அதிலிருந்து பேஸ்புக்கின் அங்கமானது வாட்ஸ் அப்.

அப்டேடான வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்பை பேஸ்புக் வாங்கியதில் இருந்து குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, ஸ்டோரீஸ் வைக்கும் வசதி, வாட்ஸ் அப் பே என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்புக்கு போட்டியாக அதைவிட அதிக வசதிகளை உள்ளடக்கிய செயலிதான் டெலிகிராம். இதற்கும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இருக்கிறார்கள்.
டெலிகிராம்
சொல்லப்போனால் டெலிகிராமில் இடம்பெற்ற வசதிகளைதான் பின்னாட்களில் வாட்ஸ் அப் காப்பி செய்துவிட்டதாகக் கூட குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இன்று வரை டெலிகிராமில் இடம்பெற்று இருக்கும் சேனல் வசதி, கருத்துக்கணிப்பு வசதி போன்றவை வாட்ஸ் அப்பில் இடம்பெறவில்லை.
குற்றச்சாட்டு
கடந்த 2020 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் தனிநபர் தகவல்களை பயன்படுத்தும் வகையில் புதிய விதிகளை கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கினர். ஆனால், காலப்போக்கில் மீண்டும் வாட்ஸ் அப்பிலேயே மக்கள் கரை ஒதுங்கினர்.

பாவெல் துரோவ்
இதற்கிடையே வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவில் பாதுகாப்பு குறைபாடு அண்மை கண்டுபிடிக்கப்பட்டதாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். ‘தங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் மக்கள், வாட்ஸ் அப் தளத்தில் இருந்து வெளியேற வேண்டும். வேறெந்த மெசேஜிங் செயலியை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். வாட்ஸ் அப் தவிர.

உளவு பார்க்கிறது
கடந்த 13 ஆண்டுகளாக வாட்ஸ் அப் ரகசிய கண்காணிப்பு கருவியாக செயல்பட்டு வருகிறது. டெலிகிராமை மக்கள் பயன்படுத்துமாறு நான் வற்புறுத்தவில்லை. உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் இருந்தால் அதன் மூலம் அதில் இருக்கும் உங்களின் அனைத்து விதமான டேட்டாக்களையும் அதனால் பயன்படுத்த இயலும்.
எச்சரிக்கை
வாட்ஸ் அப் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவது என்பது உங்கள் ஸ்மார்ட் போனை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு நீங்களே ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதை போன்றது.’ என்றார். தொடர்ந்து வாட்ஸ் அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் கடந்த 2016 ஆம் ஆண்டு பாவெல் அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Telegram update
வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை அனுப்பிவிட்டால், அதை டெலிட் மட்டும் தான் செய்ய முடியுமே தவிர, எடிட் செய்ய முடியாது. இந்த வசதி தற்போது டெலிகிராமில் உள்ளது. நாம் அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்ய வேண்டுமென்றால், வெறும் அந்த மெசேஜை ஓரிரு நொடி அழுத்தி பிடித்தால் போதும், அதற்கான ஆப்ஷன்கள் வந்துவிடும். அதில் எடிட் சென்று, நீங்கள் அனுப்பிய மெசேஜை எடிட் செய்து, அனுப்பலாம்.
டெலிகிராமில் ஒரு மெசேஜை டைப் செய்யும் போது, குறிப்பிட்ட வார்த்தைகளை மறைத்து வைத்து அனுப்பும் வசதி உள்ளது. அதாவது, நீங்கள் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் போது, நீங்கள் டைப் செய்த மெசேஜில் எந்த வார்த்தைகளை மறைக்க வேண்டுமோ, அதை செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு, Hide என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது அந்த மெசேஜை அனுப்பினால், எதிர்முனையில் இருப்பவர்களுக்கு நீங்கள் மறைத்த வார்த்தைகளானது குறியீடாக தெரியும். அதை கிளிக் செய்து பார்த்தால் மட்டுமே நீங்கள் என்ன டைப் செய்துள்ளீர்கள் என்பது எதிர்முனையில் இருப்பவருக்கு தெரியும்.

சிறிது நேரம் கழித்து மெசேஜ் அனுப்பும் வசதி
டெலிகிராம் செயலியில் ஒரு மெசேஜை Schedule செய்யும் வசதி உள்ளது. அதாவது, ஒரு மெசேஜை டைப் செய்து விட்டு, அது எத்தனை மணிக்கு, எப்போது அனுப்பப்பட வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்தில், அந்த மெசேஜ் அனுப்பப்படும். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் இப்போது தான் சோதித்து வருகிறது. விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பை காட்டிலும் டெலிகிராமில் பல்வேறு அம்சங்கள் இருப்பதால், டெலிகிராம் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ்அப்பிலும், பயனருக்குத் தேவையான அம்சங்களை உடனுக்குடன் கொண்டு வந்தால், பயனர்களின் மதிப்பை பெற முடியும்.
Whatsapp update
வாட்ஸ்அப்பில் தற்போது புதிதாக 3 விதமான அப்டேட்டுகள் வரவுள்ளன. இவை அனைத்தும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் வகையில் வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் வாட்ஸ்அப்பில் வரவிருக்கும்புதிய அப்டேட்டுகள் குறித்து பேசினார். ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க முடியாதபடி செய்தல், கடந்தகால பங்கேற்பாளர்கள் மற்றும் ஆன்லைன் நிலையை தடுப்பது உட்பட வாட்ஸ்அப்பிற்கான மூன்று புதிய தனியுரிமை அம்சங்கள் வெளியிடப்பட்டன.
இப்போது, WABetaInfo இன் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதாகத் தெரிகிறது, இது வாட்ஸ்அப் குழுவில் 1024 பேர் வரையில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிலுவையில் உள்ள குழு பங்கேற்பாளர்களின் பட்டியலையும் உருவாக்கலாம்.
வாட்ஸ்அப் குழுவில் 1024 பேர்:
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் வெளியான பீட்டா வெர்ஷனில 512 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கும் அம்சம் வெளியடப்பட்டது, தற்போது வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்ப மேலும் 1024 பேர் வரையில் உயர்த்த WhatsApp தேர்வு செய்துள்ளது. அதாவது இனி வாட்ஸ்அப் குழுவில் 1024 பேர் வரையில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தச் செயல்பாட்டை Android மற்றும் iOSக்கான WhatsApp பீட்டாவில் அணுகலாம்; இருப்பினும், இது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பீட்டா வெர்ஷனை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இந்த அம்சம் செயலில் உள்ளதா என்பதைப் பார்க்க, ஒரு குழுவை உருவாக்கவும் அல்லது வாட்ஸ்அப்பில் ஏற்கனவே உள்ள ஒன்றில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும். அப்போது, உங்கள் கணக்கிற்கு அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்பை நீங்கள் பார்க்கலாம்.
நிலுவையில் உள்ள பங்கேற்பாளர்கள்
சமீபத்தில் வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பு 2.22.21.74 மற்றும் TestFlight பில்ட் 22.21.0 (406671622) வெளியானது. அதன்படி, நிலுவையில் உள்ள குரூப் உறுப்பினர்களின் பட்டியலை, அட்மின்கள் பார்க்கும்படி புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேருவதற்கு பயனர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அந்த கோரிக்கையை நிலுவையில் வைத்திருக்கவும், அவ்வாறு நிலுவையில் உள்ளவர்களின் பட்டியலை எளிதில் பார்க்கவும் முடியும். மேலும், எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு குழுவில் சேருவதற்கான அனுமதி அளிக்கவும் முடியும். விரைவில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.