செல்போன் ஹேக்கிங் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது என்பது குறித்து பார்ப்போம்.
சிறுக சிறுக வங்கியில் சேமித்து வைத்த வங்கித் தகவல் முதல் குடும்பப் புகைப்படங்கள், அரசு அடையாள ஆவணங்கள் என அனைத்தும் ஸ்மார்ட்போனில் தான் இருக்கிறது. கையில் வைத்திருக்கும் காசை போல் ஸ்மார்ட்போனை பாதுகாத்து வருகிறோம். ஆனால் ஸ்மார்ட்போனின் உள்ளிருக்கும் டேட்டாவுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் hacking பிரச்சனைகள்!
இணைய பயன்பாடு என்பது அதிகரிக்க அதிகரிக்க அதன் மீதான தீங்கிழைக்கும் செயல்களும் அதிகரித்து வருகின்றன. தரவுத் திருட்டுகள் ஹேக்கிங் என அனைத்து செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது என்பது மட்டுமே சிறந்த வழியாகும்.
ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஒரு சிறந்த வழி, ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இல்லாதபோதும் அது சூடாகவே இருக்கும். இதுதான் காரணம் என்று முழுமையாக கூறிவிட முடியாது இருப்பினும் இதுவும் ஒரு காரணமாகும்.
ஸ்மார்ட்போனை அவ்வப்போது ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்வது அவசியம். உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வழிகளில் இதுவும் ஒன்று.

இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு சில வழிகள்!
உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்க சிறந்த வழிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிகளை நீங்கள் கற்றுக் கொள்வதோடு பிறருக்கும் சொல்லிக் கொடுத்து பாதுகாப்பாக இருக்க சொல்வது நம் கடமை ஆகும்.
அதிக பாஸ்வேர்ட் அவசியம்
இது மிகவும் அடிப்படையான விஷயம் ஆகும். பாஸ்வேர்ட்களை அதிகரிப்பது அவசியம். ஒரே பாஸ்வேர்ட் உடன் நிறுத்திவிடாமல் ஃபேஸ் அன்லாக், ஃபிங்கர் பிரிண்ட், பேட்டர்ன் என பல பாஸ்வேர்ட்களை உபயோகிப்பது அவசியம்.
அனைத்து முக்கிய பயன்பாட்டுக்கும் தனித்தனியாக லாக் போட்டு வைக்கவும். அதேபோல் ஒரே மாதிரியான பாஸ்வேர்ட் பயன்படுத்தாமல் வெவ்வேறு வகையான பாஸ்வேர்ட்களை உபயோகிப்பது அவசியம்.

VPN பயன்படுத்தலாம்
பாதுகாப்பு இல்லாமல் பொது வைஃபை பயன்படுத்த வேண்டாம். விமான நிலையங்கள், கஃபேக்கள், ஹோட்டல்கள் என பொது இடங்களில் இலவச வைஃபை பயன்படுத்தும் போது அதிகாரப்பூர்வ விபிஎன்-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் இணைப்பை விபிஎன் பாதுகாக்கிறது.
அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்கள் அவசியம்
நீங்கள் எந்த பயன்பாடுகளை பயன்படுத்தினாலும் அதை அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வது அவசியம். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டும் அதிகபட்சமாக பாதுகாப்பான பயன்பாடுகளை தான் கொண்டிருக்கிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரை பொறுத்தவரை முழுமையாக பாதுகாப்பு என்று கருதிவிட முடியாது. இருப்பினும் பிற பயன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ப்ளே ஸ்டோர் பாதுகாப்பானதாகும்.
உங்கள் முக்கிய டேட்டாக்கள் திருட்டுப்போவதற்கு பிரதான காரணம் இதுபோன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை பிற பயன்பாடுகளில் இருந்து பதிவிறக்கம் செய்வது தான்.
உங்கள் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் போன்ற பல தனிப்பட்ட தரவுகள் இதன்மூலமாக தான் திருட்டுப்போகிறது. எனவே கவனமாக பாதுகாப்பான தளங்களில் செயலிகளை பதிவிறக்கம் செய்யவும்.
காப்புப் பிரதி எடுப்பது அவசியம்
உங்கள் மொபைலில் உள்ள தகவலையும் புகைப்படங்களையும் கூகுள் டிரைவ் போன்ற பயன்பாட்டில் சேமித்துக் கொள்ளவும். உங்கள் மொபைல் தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டு விட்டாலோ தகவல் உங்களுடனே இருப்பதை இது உறுதி செய்கிறது.
அனைத்தும் போகிவிட்டதே என கையை விரித்து நிற்காமல் இப்படி செய்வதன் மூலம் அனைத்து பயன்பாடுகளையும் நீங்கள் உங்களது புது மொபைலில் கையாளலாம்.

தேவையில்லாத அணுகலை தொட வேண்டாம்
எந்த சூழ்நிலையிலும் தேவையில்லாமல் வரும் பயன்பாட்டை அணுக வேண்டாம். உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்தோ அல்லது தெரிந்த எண்ணில் இருந்தோ ஏதேனும் லிங்க் மெசேஜ் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம்.
இதை பகிர்ந்தால் பரிசு கிடைக்கும் என்று குறிப்பிட்டு ஏதேனும் மெசேஜ் வந்தால் அதை தொடவும் வேண்டாம் கிளிக் செய்யவும் வேண்டாம்.
அறியாத எண்ணில் இருந்து போன் அழைப்பு வந்தால் அதை எடுக்க வேண்டாம், அப்படி எடுக்கும் பட்சத்தில் அவர்கள் கேட்கும் எந்த தகவலையும் பகிர வேண்டாம்.
இதுவே பாதுகாப்பாக இருக்க வழிகள் என்று குறிப்பிட்டுவிட முடியாது. பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளில் இதுவும் சில. ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக கையாண்டு இந்த டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பாக வாழ்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
பெகாசஸ் மூலம் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு அவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களான நாம் பெகாசிஸ் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதேவேளையில், பிற நபர்கள் நமது செல்போன்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அறிந்துகொள்வதில் உள்ள ஆர்வம் இத்தகைய ஹேக் நிகழ்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. தனி நபர்களின் அந்தரங்கங்களை அறிந்துகொண்டு அவற்றை வைத்து அவர்களை மிரட்டி தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர். பணப்பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை ஹேக் செய்து, ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்களும் சமீப காலமாக பதிவாகி வருகிறது. ஹேக் செய்வதற்காக நமது செல்போனில் ஊடுருவும் இத்தகைய செயலிகளை கண்டுபிடிப்பது என்பது எளிதானது அல்ல. எனினும் சில அறிகுறிகள் மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா அல்லது உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

செல்போன் பேட்டரி விரைவாக தீரும்: ஒரு நாள் , 2 நாள் சார்ஜ் நிற்கும் உங்கள் செல்போனில் அண்மை காலமாக பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுகிறதா? ஆம், என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். செல்போனில் பேட்டரி விரைவாக தீர்ந்துபோவது அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதன் அறிகுறியே. எனினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, வேறு செயலிகள் எதாவது பின்னணியில் இயங்கிகொண்டிருக்கிறதா என்பதையும் ஆராயுங்கள். பின்னணியில் பல்வேறு செயலிகள் இயங்கிக்கொண்டிருந்தாலும் செல்போனின் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடும்.
பதிவிறக்கம் செய்யாத செயலிகள் செல்போனில் இருப்பது: செல்போனை பயன்படுத்தும்போது நீங்கள் பதிவிறக்கம் செய்யப்படாத செயலிகள் எதாவது உங்கள் செல்போனில் இருப்பதை பார்த்திருக்கலாம். இதுவும் ஹேக்கர் அல்லது ஸ்பைவேரின் வேலையாக இருக்கலாம்.
செல்போனின் செயல்பாடு மந்தமாதல்: செல்போனில் வேகம் திடீரென குறையும். சில சமயங்களில் செல்போன் தானாகவே அணைந்து ரீ-ஸ்டார்ட் ஆகும். இதுவும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம்.
மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்தல்: நீங்கள் உங்கள் செல்போனை அதிகம் பயன்படுத்தாத போதும் அதன் டேட்டா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது என்பதும் ஹேக்கின் அறிகுறிதான். இதற்கு காரணமாக உங்கள் செல்போனில் உள்ள ஹேக்கிங் செயலிகள் இந்தளவு அதிக டேட்டாவை பயன்படுத்தி வரலாம்.
செல்போனின் செயல்பாட்டில் விசித்திரம்: உங்கள் செல்போன் விசித்திரமாக செயல்படக் கூடும். செயலிகள் திடீரென செயல்படாமல் போகலாம் அல்லது இயங்க நீண்ட நேரம் எடுக்கலாம். பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாகத் காணப்படும்.
ஃப்ளாஷ் லைட்: நீங்கள் செல்போனை பயன்படுத்தாத போதும் அதன் ஃபளாஷ் லைட் தானாக ஆன் ஆகிறதா? உங்கள் செல்போன் வேறு யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதன் அறிகுறி இது.

குறுஞ்செய்திகள், அழைப்புகள்: நீங்கள் மேற்கொள்ளாத அழைப்புகள், நீங்கள் அனுப்பாத குறுஞ்செய்திகள் ஆகியவை உங்கள் செல்போனில் காணப்பட்டால், அவையும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறியே ஆகும்.